சாலையில் நுழைந்தேன்
வைக்கும் ஒவ்வொரு அடியும்,
வாழ்வில் புது அர்த்தங்களை கட்டவிழ்த்தது.
முதல் பத்து நிமிடங்கள் பாடசாலை மாணவர்கள் என்னுடன் சாலையில் நடந்து வந்தார்கள்!
முதுகில் சுமையும், முகத்தில் புன்னகையும் ஏந்திய தேவலோக மொட்டுக்களை ரசித்தேன்!
புகைவிட்டுக்கொண்டே வந்தது, "ஒரு கதவு பஸ் வண்டி", தொத்தினேன் மிதிபலகையில்.
அடுத்த பத்து நிமிடங்கள் ரிஸ்கான பயணம். கை நழுவினால் பயணம் பாதியில் முற்றுப்பெறும்.
பத்து நிமிடங்கள் சகித்துக்கொண்டே வந்திறங்கினேன்.
தலைநகர் செல்லும் சொகுசு பஸ் எனக்காக காத்திருந்தது. ஒரு மணித்தியாலம் பயணித்தேன்.
தலைநகரை நெருங்கியதும் இறங்கினேன், வெயில் என்னை சுட்டது.
வாழ்க்கையின் உண்மையும் என்னை சுட்டது.
உலகில் உள்ள நாம் எல்லோருமே வழிப்போக்கர்கள்!
நாம் நடக்கும் பாதையில் நன்மையும் வரும் தீமையும் வரும் .
இன்பமும் வரும் , துன்பமும் வரும்.
இறைவன் சுழற்றுகிறான், யாவும் அசைகிறது.
இன்று சிரிப்பவன் , நேற்று அழுதிருப்பான்,
இன்று அழுபவன் நாளை சிரிப்பான்!
நிலை மாறும் உலகமடா இது!
உன்னை நல்வழிப்படுத்து. உன் பாதையை செவ்வையாக்கு!
பிறகு மற்றவன் பாதையை செவ்வையாக்கலாம் என்பது என் இறைவனின் வாக்கு!
உன்னை போல உன்னை நேசிப்பவன் எவனும் இல்லை. உனக்கு உண்மையாய் இரு.
மற்றவன் பசியை போக்குவதற்கு முந்து. மற்றவனின் வெறியை ஆற்றுவதற்கு முந்து.
இதுவே என் இறைவன் எனக்கு கற்றுக்கொடுத்த பாடம்.
என் பிறப்பின் அர்த்தம் முழுமையாகும் நாள் வெகு விரைவில்!
நான் வழிப்போக்கன் தான்!
ஆனால் எனக்கு பின் அந்த வழியில் வருபவன் என்னை தெரிந்துக்கொள்ளும் அளவில் நான் வாழ ஆசைபடுகிறேன்!
நான் வணங்கும் கடவுள் என் முன்னே செல்கிறார். எனக்கு முன்னே வருகிற ஆபத்துக்களை அவர் அகற்ற வல்லவர்.
சூரியனின் கீழே , பூமியின் மேலே , எல்லாம் மாயை!
நமக்கும் மேல் ஒரு சக்தி உண்டு!