Thursday, December 8, 2011

நானும் தமிழன்!

தமிழனாக பிறந்ததை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்..
வெற்றியில் அறிவிப்பாளனாக இருப்பதை நினைத்தும் பெருமைப்படுகிறேன்..
சிரிக்க வைப்பவனுக்கு சிந்திக்க வைக்கவும் தெரியும்...
ஒரு மணித்தியாலம் எனக்கு செவிக்கொடுங்கள்!
வரும் பௌர்ணமி தினத்தன்று....
மேலதிக விபரங்களுக்கு வெற்றி கேளுங்கள்!

Sunday, October 30, 2011

வானிலையும் என் மனநிலையும்!

மழையுடன் கூடிய குளிர் காற்று என் காதில் சொல்லத்துடிப்பது என்ன?
மின்னல்கள் தோன்றும் அரை நொடியில் விண்ணில் என் தேவதை முகம் தெரிவதென்ன?
நிலத்தில் விழுந்து வெடிக்கும் துளியைப்போல் சிதறுகிறது என் கவனம்!
உன் புன்னகையால் நோகுது என் ஆவி..! பார்வையில் கொடிய கணைகளை  விட்டாய் ஏவி!
குமரியின் அழகில் குமுறுது மேகம், 
இடைவெளி தூரம் என அழுகிறது வானம்!
பாதையில் வீழ்ந்து கிடக்கும் ஜலத்திற்கு மோட்சம் கொடுக்குது உன் பாதம்,
உன் உதட்டின் வரிகளே தினமும் நான் படித்திடும் வேதம்!  

Friday, September 23, 2011

எங்கேயும் எப்போதும் எனது பார்வையில்.

"எங்கேயும் எப்போதும்" அனைவரும் கண்டிப்பாக பார்க்கவேண்டிய திரைப்படம் அல்ல திரைப்பாடம். உயிரின் மதிப்பை உலகிற்கு உணர்த்திய "அன்பே சிவம்" திரைப்படத்திற்கு பிறகு உருவாக்கப்பட்ட ஒரு அற்புதமான படைப்புதான் இந்த எங்கேயும் எப்போதும். AR முருகதாஸின் தயாரிப்பில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார் அறிமுக(?) இயக்குனர் சரவணன். ஜெய்,அஞ்சலி,சர்வானந்த், அனனியா ஆகியோரின் இயல்பான நடிப்பு அருமை. அதிலும் க்ளைமாக்ஸ் காட்சிகளில் அஞ்சலியின் நடிப்பு பிரமாதம். 

இதுவரை திரையில் காணாத இருவேறு வித்தியாசமான காதல் கதைகள் ஒரு இடத்தில் வந்து சங்கமமாகிறது. அந்த சங்கமம் பார்க்கும் அனைவரது மனதையும் உளுக்கி எடுக்கிறது. அந்த காட்சிக்கு பிறகு திரையரங்கில் மயான அமைதி. படம் முடிந்து விளக்குகள் மீண்டும் ஒளிரும்வரை நீடித்தது அந்த அமைதி. காமெடியன், வில்லன், சண்டைக்காட்சி, டூயட் பாடல், முத்தக்காட்சிகள், கிளாமர், 2 பீஸ் அழகிகள், Night Club .  இவை எதுவுமே இன்றி சுவாரஷ்யமாக நகர்கிறது கதை.

"எனக்கு ஏட்டா இருக்கிறவர் உனக்கென்ன DIG ஆவா இருப்பாரு?" போன்ற யதார்த்தமான வசனங்கள்  பார்ப்போரை தன்னை மறந்து சிரிக்கத்தூண்டுகிறது.

தொழில்நுட்பக்குழுவினர்  தங்கள் பங்களிப்பை சிறப்பாக வழங்கியுள்ளனர்.

கம்பி மத்தாப்பு பாடல் புகழ் சத்யாவின் இசையில் உருவாகியிருக்கும் "கோவிந்தா" மற்றும் "மாசமா" பாடல்கள் மனதில் கதிரை போட்டு அமர்கிறது. பின்னணி இசை எளிமை ஆனால் புதுமை.

கண்டிப்பாக வாகன ஓட்டுனர்கள் அனைவரும் பார்க்கவேண்டிய அற்புதமான  இந்த திரைப்படம், இறுதியில் அனைவருக்கும் சொல்லும் மெசேஜ் சாலை விதிகளை மீறாதீர்கள், 10M இடைவெளியில் வரவும்.

DOT

Monday, September 5, 2011

இந்த உலகத்தில நல்லவனா வாழ்றது ரொம்ப கஷ்டம்!


நல்லவனா வாழனும் னு நீங்க நினைச்சா அதைவிட பெரிய சவால் இந்த உலகத்தில இல்லை. இந்த உலகத்தில வாழற யாருமே நல்லவங்க இல்ல. அப்பிடி நல்லவங்களா இருந்த அவங்க ஏன் இந்த உலகத்தில இருக்கணும்?. இதை எழுதுற நானும் நல்லவன் இல்ல. நல்லவனா வாழ முயற்சி செய்றவங்களுக்கு இந்த உலகம் கொடுக்கும் பெயர்கள் என்ன தெரியுமா? ஏமாளி,கோழை,கையாலாகாதவன், பொம்பள இப்டி சில டீசென்டான பெயர்களும் உண்டு.. சொல்லமுடியாத சில பெயர்களும் உண்டு. நல்லவனா வாழ Try பண்ணனும். அது ரொம்ப கஷ்டம் பா! நல்லவனா வாழ முயற்சி பண்ணுவதென்பது ஒரு அரசன் தனித்து நின்று பல சேனைகளுக்கு எதிராக போராடுவதற்கு சமன். இந்த போர்ல நீங்க சந்திக்கும் மிகப்பெரிய எதிரி தனிமை. தனிமையா இருக்கு போது உங்கள் மனசின் கட்டுப்பாடு உங்கள் கையில் இருக்காது. ஆகவே இந்த எதிரிய முதல்ல நாங்க கொல்லனும். இந்த சண்டைல நாங்க தோற்க கூடாது. ஆனா ரொம்ப கஷ்டம் Friends !!! உங்களால ஜெயிக்க முடியுமா?? நான் Try பண்ணபோறேன். All the Best சொல்ல மாட்டீங்களா?...

Thursday, August 4, 2011

என்னிடம் எனக்கு பிடித்த ஒரு பழக்கம்!

வாழ்க்கைல எங்கள சுத்தி நிறைய அழகான விஷயங்கள் இருக்கு.. காலையில எழும்பியதும் ஜன்னலுக்கு வெளியில பனியில நனைந்த மரங்கள ரசிப்போம், வானத்துல சீரா பறக்குற பறவைகளை ரசிப்போம், பூக்களை ரசிப்போம், ஏன் வீதியில போற அழகான பெண்களையும்  ரசிப்போம், குழந்தைகளின் சிரிப்பையும் ரசிப்போம், கட்டிடங்கள ரசிப்போம்.. இப்டி சொல்லிக்கிட்டே போகலாம். ஆனா யாரவது உங்க நிழல நீங்களே ரசிச்சதுண்டா?. நான் ரசிச்சிருக்கேன், எப்பவும் என்குடவே இருக்கு. நான் அத மிதிச்சாலும் என் கூடவே வருது.. எப்பவுமே என்ன விட்டு பிரியாது. இப்டி தான் எங்க வாழ்க்கைல உள்ள சில உறவுகளும். எங்க கூடவே இருக்கும், ஆனா நாங்க கண்டுக்குறது இல்ல. என் நிழல் என்ன விட ரொம்ப அழகா இருக்கும். சில நேரம் நான் தலை முடிய சீவுறதும் நிழல பார்த்துதான். என் நிழல நான் எப்பவும் நேசிக்கிறேன் காரணம் நான் சாகும் வரைக்கும் என்கூட வரப்போறது அந்த நிழல் மட்டும்தான்!

Sunday, July 31, 2011

ஓநாய் ஜாக்கிரதை!

இப்பொழுது என் அருகில் இல்லாத ஒரு நண்பிக்கு நான் எழுதிக்கொள்வது, வாழ்க்கையில் ஒரு முக்கியமான தருணத்தில் நீங்கள் தவறான முடிவை எடுத்ததை நினைத்து நான் வருந்துகிறேன்.. உங்களுடன் இருக்கும் ஒரு கல்லூரி நண்பி மீது உங்களுக்கு இருக்கும் நம்பிக்கை, இந்த நண்பன் மீது இருக்கவில்லை. பரவாயில்லை. யோசிக்கும் திறன் இருந்தால் சற்று சிந்தித்து பாருங்கள். ஒரு வருடத்திற்கு முன்னர் நீங்கள் அந்த கல்லூரி நண்பியுடன் ஒரு நேர்முக பரீட்ச்சைக்கு சென்றீர்கள். அந்த இடத்திலிருந்து யோசித்து பாருங்கள்.. இன்று நீங்கள் எடுத்த முடிவு தவறானதென்றும், அந்த தவறான முடிவை நீங்கள் எடுத்தமைக்கு பின்னால் இருக்கும் சூழ்ச்சியையும் உணர்வீர்கள்! 


உங்களுக்காக கண்ணீர் வடிப்பது ஒரு ஓநாய் என்பதை புரிந்துகொள்ளுங்கள்!

Sunday, July 10, 2011

விழிகளில் நூறு கனவுகள்!

ரொம்ப நாள் கனவு! நாடகம் எழுத ரொம்ப பிடிக்கும். அதற்க்கு திறமை தந்த கடவுளுக்கு ரொம்ப நன்றி! அடுத்த படியாக வாய்ப்புதந்த நிறுவன உரிமையாளர்களான திரு ஜனகன் அவர்களுக்கும், திரு குகவர்த்தன் அவர்களுக்கும்... என்றும் அன்பிற்குரிய லோஷன் அண்ணாவுக்கும் நன்றிகள்!

கதை உருவாக்கத்திற்கு உதவிய தர்ஷி, டிலக்சனா, நந்தினி ஆகியோருக்கு அன்பான நன்றிகள். இந்த தொடர் ஒரு கூட்டு முயற்ச்சி. வெற்றியின் வெற்றிக்கு பாடுபடும் யாரும் நான் என்று சொன்னதில்லை.. நாம் என்றே சொல்வோம். இவ்வாறான வித்தியாசமாக யோசிக்கும் அணியுடன் இந்த முயற்ச்சியில் இறங்கியது மிக்க மகிழ்ச்சி! அணியில் பலம் அதிகம்.. எந்த சக்தியாலும் தகர்க்க முடியாது! காரணம் தெய்வசக்தி நம்முடன்..!

பெயரிலும் வெற்றி, செயலிலும் வெற்றி, முடிவும் வெற்றியே!

Friday, June 3, 2011

வெற்றி நிச்சயம், இது வேத சத்தியம்!

வெற்றி வரலாற்றில் நாவல் நிற எழுத்துக்களால் எழுதப்படவேண்டிய ஒரு முக்கியமான நாள்தான் இன்று!

நிறுவனம் புதுப்பொழிவு பெற்று மிகக்குறுகிய காலத்தினுள் இத்தகைய சாதனையை நிகழ்த்திய வெற்றிக்குழுவினர் அனைவருக்கும் Hats Off !  

இன்று எனக்கு இரட்டை சந்தோஷம், காரணம் நமது கேளு ராஜா கேளு நிகழ்ச்சிக்கும் இன்று 250 நாள் பூர்த்தியானது. நம்  மனதில் உண்மையிலேயே ஒரு பெரிய பாரம் இருக்கு. லோஷன் அண்ணாவின் நிகழ்ச்சி முடிய நாங்க ஆரம்பிக்கிறோம், விடியல்ல அவரோட இருக்குற நேயர்களை நாங்க எங்க நிகழ்ச்சியிலையும் தக்க வச்சி அந்த அளவு குறையாம மற்ற நிகழ்ச்சிகளுக்கும் நாங்க கொடுக்கணும்.. இனி வரப்போற ஒவ்வொரு கேளு ராஜா கேளு நிகழ்ச்சியிலும் எங்களோட முழு முயற்ச்சியும் அதான்.. அதற்க்கு நேயர்களின் ஆதரவு மிக முக்கியம்..

வேறு எந்தவொரு வானொலியிலும் இல்லாத தனித்துவம் வெற்றியில் உண்டு... 

நாங்க நிகழ்ச்சி செய்ற அதே நேரத்தில எங்களுக்கு  போட்டியா நிகழ்ச்சி செய்றவங்களுக்கு வயசும் அதிகம், அனுபவமும் அதிகம்.. So Heavy Competition இருக்கு. ஆனாலும்  நாங்க Top ல போட்டி போடுறம் னு நினைச்சா பெருமையா இருக்கு.. 

கடவுளின் ஆசியும், எம் முன்னோடிகளின் அறிவுரையும், நண்பர்களாகிய உங்கள் தோளும் இருக்கும் வரை 

வெற்றி நிச்சயம், இது வேத சத்தியம்! 

Saturday, May 21, 2011

கடவுளுக்கு உருவம் கொடுக்க நீங்கள் யார்?

கடவுள் ஒருவரே.. உங்கள் நம்பிக்கையின் படி கடவுளை நீங்கள் வெவ்வேறு பெயர்களில் அழைக்கிறீர்கள். ஆனால் கடவுளை இதுவரை கண்டவர் எவரும் இல்லை, அப்படி இருக்கும் போது கடவுளுக்கு மனிதனால் உருவம் கொடுக்க முடியுமா? கடவுளை சிலை வடிவில் வடித்த மனிதன் கடவுளை கண்டான? ஒருபோதும் இல்லை. அப்படியிருக்க எவனோ ஒருவன் அறிமுகப்படுத்திய உருவத்தை என்னால் கடவுளாக ஏற்றுக்கொள்ள முடியாது. கடவுள் எங்கும் இருக்கிறார். சமுத்திரத்தின் ஆழத்திலும் இருக்கிறார். இரு கண்களை மூடி கடவுளை மனதில் நினைத்து அவரை வாழ்த்தி பாடினால் கடவுள் உங்கள் அருகில் இருப்பதை உணர்வீர்கள். ஒரு மரம் இருக்கு, அந்த மரத்தை வெட்டி விறகுக்கு எடுக்குறாங்க, அதே மரத்தில ஒரு மேசையும் செய்றாங்க, அப்புறம் அந்த மரத்த சீவி செதுக்கி ஒரு சிலைய உருவாக்கி அத கடவுள் னு சொல்லுறாங்க.


உங்க தோல் எந்த material ல செய்ததுன்னு உங்களால சொல்ல முடியுமா? அவ்வளவு அழகா கடவுள் உங்கள உருவாக்கி இருக்காரு. ஆனா கடவுள ரொம்ப லேசா தங்கத்திலும், வெள்ளியிலும், இரும்பிலும்,மரத்திலும்.... உருவாக்குறாங்க. கேட்டா கலை னு சொல்லுறாங்க. அவங்க இஷ்டத்துக்கு கடவுளுக்கு நாலு கை வைக்கிறாங்க, நாலு தலை வைக்கிறாங்க. பிடிக்கல்ல பிடிக்கல்ல பிடிக்கல்ல.. 

தெய்வம் வாழ்வது எங்கே? தவறு செய்பவர்களின் அருகில், எப்போ தவறை உணர்கிறார்களோ.. அப்பொழுது அவர்களின் மனதிற்குள் வந்துவிடுவார். 

என்னோட இந்த கருத்திற்கு மறுப்பு இருந்தால், கீழே எழுதுங்கள்.. நானும் எழுத தயார்!

Tuesday, May 17, 2011

May 17

இந்த நாள் என் வாழ்வில் ஒரு முக்கியமான நாள், என் வாழ்க்கையில் நிறைய விஷயங்கள பெற்ற நாள், அதே நேரம் சில விஷயங்கள இழந்த நாள். இரண்டு வருடங்களுக்கு முன்னாடி என் மாமா இதே நாள்ல இறந்துட்டாரு. போன வருஷம் இதே நாள்ல நான் வெற்றிக்கு வந்தேன். ஒரு வருஷம் ஆயிடுச்சி. என்ன வளர்த்தது வெற்றிதான். நான் எப்போ வேணும்னாலும், எங்க இருந்தாலும் இத சொல்லுவேன். என்னை ஊடகத்துக்கு அறிமுகபடுத்தின என் குரு லோஷன் அண்ணாவை எப்பவும் மறக்க மாட்டேன். வெற்றி ல நான் வளரனும் னு ஆசைப்பட்ட என் முன்னோடிகளான ஹிஷாம் அண்ணா, விமல் அண்ணா, பிரதீப் அண்ணா, வைதேகி அக்கா இவங்க எல்லாருக்கும் எனது நன்றிகள். 


வெற்றிக்கு வந்த முதல் நாளே லேட்டா தான் வந்தேன்.. முகம் முழுக்க தாடியோட, என்னை பார்த்ததும் அண்ணா கேட்ட முதல் வார்த்தை "ஏன் தாடி?" நான் ஒண்ணுமே பேச இல்ல. தர்ஷி பக்கத்துல ஒரு சீட் இருந்தது அங்க போயிட்டு உட்கார்ந்தேன்.. அன்றிலிருந்து இன்று வரை அவங்க என் best friend . 




வெற்றியில் நான் செய்த முதல் நிகழ்ச்சி இசை ராஜாங்கம். 5 நாள் தொடர்ந்து செய்தேன். உத்தியோகப்பூர்வமாக ஒரு அறிவிப்பாள(ல)னாக  அறிமுகமானது "கேளு ராஜா கேளு" நிகழ்ச்சியில். அது ஒரு சுவாரஷ்யமான கதை. முதலில் நானும் வனிதாவும் ஒன்றாக கற்றது கையளவு செய்வதாகத்தான் திட்டம் இருந்தது. நான்காவது இசை ராஜாங்கம் முடிச்சிட்டு வீட்ல போய் நல்லா தூங்கிட்டு இருந்தேன். வைதேகி அக்கா call பண்ணாங்க, தம்பி next monday நீங்களும் நானும்தான் programme னு சொன்னங்க, நான் அப்புடியே ஷாக் ஆயிட்டேன்!! . ரொம்ப சந்தோஷமா இருந்தது. ஆனா அந்த சந்தோஷம் நிலைக்க இல்ல. அவங்க ஒரு வாரம்தான் செய்தாங்க அப்புறம் கனடா போய்ட்டாங்க. ரொம்ப கவலைய இருந்தது. அப்புறம் தினேஷாவுடன் நிகழ்ச்சி 150 நாட்களுக்கு மேல் நகர்ந்தது. தினேஷா வ Easy யா கடிக்கலாம், programme டைம் ல என்ன நம்பி நிறைய விஷயம் சொல்லுவாங்க நான் அத உல்டாவாக்கி ON AIR  ல சொல்லிருவேன் :D . அப்புறம் தர்ஷியோட programme  செய்யணும் னு ஒரு அவல நிலை ( Just  kidding ) தர்ஷிய Easy யா கடிக்க முடியாது. செம உஷார் பா(ர்)ட்டி. இன்று வரை programme சிறப்பா தொடருதுன்னா அதுக்கு காரணம், அன்பான நேயர்கள்.


வெற்றியில் என்ன நிகழ்ச்சி செய்ய விருப்பம் னு கேட்டால்.. அன்றும் இன்றும் என்றும் நான் சொல்லும் ஒரே பதில், "கேளு ராஜா கேளு"

Thursday, May 12, 2011

மனைவியை இழந்த ஒரு கணவனின் மனநிலை!

காலையில் நித்திரையிலிருந்து விழிக்கும்போது,
போர்வைக்குள் ஈரமான ரோஜாவை போல,
நீ உறங்கும் காட்சியை காண ஆசை!

உன் முகத்தில் வீழ்ந்திருக்கும் கூந்தலை,
என் ஒரு விரலினால் வருடி ,
உன் காதோரம் சொருகிவிட ஆசை!

என் விரல் பட்டு நீ உசும்பும்போது,
உன் உறக்கம் பாதி கலைகையில்,
உன் இருவரி உதட்டில்,
ஒரு மெல்லிய முத்தமிட ஆசை!

என் முத்தம் உன்னை தீண்டியதும்,
புலி பதுங்கியிருந்து பாய்வதை போல்,
நீ என் மீது பாய்ந்து,
என் காதோரம் கடிக்க வேண்டும் என்று ஆசை!

என் நெஞ்சின் மீது,
உன் இருகைகளையும்,
ஒன்றின் மேல் ஒன்று வைத்து,
அதன் மேல் உன் நாடியை வைத்து,
என்னுடன் நீ நிறைய பேசனும்.
நீ பேசும் போது,
வளைந்து நெளியும் உன் இருவரி உதடுகளை,
நான் ரசிக்கனும்னு ரொம்ப ரொம்ப ஆசை!

Tuesday, May 10, 2011

நானும் கவிஞன்தான்!

எனக்கு பேசத் தெரியும்,
உனக்கு கேட்கத் தெரியும்!
ஆனால் நான் பேச மாட்டேன்,
காரணம்... நீ கேட்க மாட்டாயோ என்ற அச்சம்!

............

உன் தாயின் கருவறைக்கு எனது நன்றிகள்!
ஆயுள் முழுதும் என் மனம் சுமக்கும் உன்னை,
பத்து மாதம் பத்திரமாக அது சுமந்ததே!

..........

இரவில் தனிமையில்
சாலையில் நான் வைக்கும் ,
ஒவ்வொரு காலடிக்கும் பக்கத்தில்,
இன்னுமொரு பாத சுவடு இருப்பதை உணர்கிறேன்!
நினைவிலும் நீ என்னோடு!

.......

கருங்கல்லாக இருந்த என் மனதை,
கல்வெட்டாக மாற்றிவிட்டாய்!
அது என் மணவறைக்க? கல்லறைக்கா?

.........
நானும் கவிஞன்தான்!

என்னை கவிஞன் ஆக்கியதும்  மூன்று எழுத்து தான். 

ஆனால் காதல் அல்ல! :)

Sunday, May 8, 2011

அம்மா!

உலகில் பிறக்கும் எந்த மனிதனும் முதலில் சொல்லும் வார்த்தை மட்டும் அல்ல அதிகமாக சொல்லும் வார்த்தை அம்மா!. பெண்களே ஒரு நாளும் சொல்லாதீங்க "ச்சே நான் ஏன் பொண்ணா பொறந்தேன்"னு, அம்மா ஆகுற பாக்கியம் ஆண்களுக்கு இல்லையேன்னு எனக்கு கவலையா இருக்கு ( சிரிக்காதீங்க). ஒரு 5 KG அரிசி மூட்டைய 1 நாள் உங்க வயித்துல கட்டிக்கொண்டு இருப்பீங்களா? ஆனா உங்கள 10 மாசம் கொஞ்சம் கூட சலிக்காம இடுப்புல சுமந்த உங்க அம்மாவை மதிக்காவிட்டாலும் பரவாயில்லை, மிதிக்கதீங்க. இன்று அன்னையர் இல்லத்தில் உள்ள அம்மாமாரின் கண்ணீரில் குளித்தாலும் சில பிள்ளைகளின் பாவம் தீராது. உங்க அம்மாக்கு சோறு போட்டு வீட்ல வச்சி பார்த்துகிட்டா தேய்ந்து போய்டுவீங்களா? "சாகும் வரைக்கும் அம்மாவை கூட வச்சி பாரு, இல்லன்னா செத்து போ!"

Tuesday, May 3, 2011

சிறிய கற்பனை!

திருக்குறள் படித்தேன் புரியவில்லை
உன் இதழ்களை கண்டேன் புரிந்துக்கொண்டேன்!
அது இரண்டு வரி காவியம்!
இன்னும் ஆழமாக கற்க மனம் ஏங்குகிறது!

Thursday, April 28, 2011

கொஞ்சம் கொஞ்சமாய் !

கொஞ்சம் கொஞ்சமாய்
உன் அழகை எனக்கு காண்பிக்கிறாய் !
எப்பொழுது உன் மொத்த அழகையும்
காண்பேன் என்றேன்....
பௌர்ணமி வரை காத்திரு என்றது,
நிலவு என்னிடம் !

Wednesday, April 27, 2011

காதலும் A/C பஸ்ஸும்

காதல்ல எத்தனையோ வகை இருக்கு. ஆனா நாய் காதல் கேள்விப்பட்டிருகீங்களா? ஊரெல்லாம் பார்க்க இரு உடல்கள் மாத்திரம் நடத்தும் போலி நாடகத்தின் பெயர்தான் நாய் காதல். எனக்கோ பிரயாணம் என்றால் ரொம்ப பிடிக்கும். அதனாலதான் தினமும் நீர்கொழும்பு ல இருந்து ஆபீஸ் வாறன். காலை எழும்ப late ஆனா AC பஸ்ல வந்து Time Cover  பண்ணிடுவேன் ( Is it ? ).  அப்படி வரும் போது இந்த மாதிரி நிறைய நாய் காதலை பஸ் ல பார்த்திருக்கேன் ( நான் இப்பிடி சொல்லிட்டேன் னு சொல்லி Free யா படம் பார்குறீன்களா? னு கேட்க கூடாது ஆமா!) 

நல்ல நேரம் நம்ம நாடு ரொம்ப சின்னது. சும்மா சரியும் நம்ம நாடு ரஷ்யா மாதிரி பெரிய நாடா இருந்துதுன்னா, கிழக்குல ஏறி மேற்குல இறங்கும் போது கையில குழந்தயோடத்தான் இறங்குவாங்க.

காதல் ரொம்ப அழகானது, அதே நேரம் புனிதமானது. உங்க காம ஆசையல அத public ஆ மேய விட்டு காதலை அசிங்கமாக்கதீங்க காதலர்களே Please !

உங்க காதலை நீங்களும் உங்கள் காதலியும் மட்டும் தெரிஞ்சுகொண்டா போதும். விளம்பரம் எதுக்கு? 

Monday, April 25, 2011

கடவுளுக்கு நோய் வருமா?

நானும் நீங்களும் இன்று சுவாசிப்பதற்கு காரணம் கடவுள். நம் நாசியில் தனது சுவாசத்தை வைத்ததும் கடவுள். அப்படி இருக்கும் போது அதே கடவுளுக்கு மூச்சு திணறல் ஏற்படுமா? நோயாளிகளை குணமாக்கும் கடவுளை நோய் தாக்குமா? நான் நாத்திகன் அல்ல, ஆனால் நான் கடவுள் என்று சொல்லும் மனிதர்களை எதிர்ப்பவன். நல்ல காரியங்களை செய்யும் மனிதன் கடவுள் அல்ல, அவன் ஒரு நாள் கடவுளை காண்பான் என்பதே உண்மை.  நான் நினைப்பது சரி என்று நான் சொல்லவில்லை, சரியானதையே நான் நினைக்கிறேன். ஒன்றென தெய்வம் உண்டென கொள்வோம்.

Thursday, April 21, 2011

இது இந்த உலகின் வெற்றியின் நாள்.

இற்றைக்கு 2000௦௦௦ வருடங்களுக்கு முன்னர் நானும் நீங்களும் செய்த பாவத்திற்காக இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டார். அவர் மரித்தது கிறிஸ்தவர்களுக்காக மட்டும் அல்ல, உலகின் அனைத்து மக்களுக்காகவும் அவர் தன் ஜீவனை பலியாக தந்தார். அந்நாட்களில் ஒருவர் தன்னுடைய பாவங்களை நிவர்த்தி செய்வதற்காக ஆட்டுக்குட்டியையோ அல்லது புறாவையோ பலியிடுவது வழக்கம். ஆனால் தன்னையே ஜீவ பலியாக தந்து ஒட்டு மொத்த உலகத்தின் பாவங்களிற்கும் விலையை செலுத்தி நம்மை மீட்டுக்கொண்டார். சிலுவை மரணத்தின் முழு வேதனையையும் உணர வேண்டும் என்பதற்காகதான் அவர் ஒரு மனிதனாக இந்த உலகிற்கு வந்தார். பாவம் என்னும் சிறையில் இந்த உலகை பிடித்து வைத்திருந்த பிசாசின் தலையை நசுக்கி, மரணத்தின் கூரை உடைத்து நம்மை மீட்டுக்கொண்ட தேவனை நான் என்றும் வணங்குவேன். மறுபடியும் நான் பாவம் செய்தால், அவர் சிலுவையில் எனக்காக செய்த தியாகத்தை நான் வீணாக்குவதாக  அமையும். 

Wednesday, April 20, 2011

கலைஞர்களை மதிக்கும் வெற்றி!

திகதி : 20.04.2011

நேரம் : 8 : 12 AM

நிகழ்ச்சி : வெற்றியின் விடியல்

லோஷன் அண்ணா சொன்ன வார்த்தை : "இந்த பாடலை யார் வேண்டுமென்றாலும் ஒலிபரப்பலாம்."

இதிலிருந்து என்ன தெரிகிறது? கலைஞர்களின் படைப்புகளுக்கு உண்மையான வெற்றி வெற்றியில் உண்டு.
எத்தனை நாளைக்கு தென்னிந்திய பாடல்களை மாத்திரம் ரசிப்பது? தென்இந்திய தரத்தில் பாடல்களை உருவாக்கும் ஆற்றல் நம்மவர்களிடமும் உண்டு. ஆனால் அவற்றை நம் நாட்டு ஊடகங்களில் வெளியிட பயபடுறாங்க. காரணம் சில சுயநலவாதிகள். வெற்றி யாவருக்கும் வெற்றி கொடுக்க தயார். 

Tuesday, April 19, 2011

எனக்கு தெரிந்த ஒரு உண்மை...2

தப்பு செய்ய யாருக்குத்தான் பிடிக்காது? தப்புசெய்ய ஆர்வம் வரும்போது ரொம்ப சுகமா இருக்கும். ஆனா தப்பு செய்து முடிஞ்சதும் மனசுல ஏதோ ஒரு இனம் புரியாத குழப்பம், கவலை அல்லது அழுத்தம் ஏற்படும்.  அது ஏன்னு? நீங்க யோசிச்சு பார்திருகிங்களா? 

தப்பு செய்ய உங்க மனசுல ஆர்வத்தை தூண்டுவது தீய சக்தியின் வேலை. நீங்க தப்பு செய்ததும் கடவுள் உங்கள நினைத்து வேதனைப்படுவர். அந்த வேதனைய நீங்க உணரலாம். அதனாலதான் தப்பு செய்து முடிஞ்சதும் உங்க மனசு அழுத்தமாகுது.

கெட்டவனா வாழ்றதுல எந்த த்ரில்லும் இல்ல. ஆனா நல்லவனா வாழ முயற்சி செய்து பாருங்க... ஒரு Adventure Game விளையாடுற மாதிரியே இருக்கும்.

Monday, April 11, 2011

கடவுள் எப்படி இருக்கனும்னு நினைக்குறீங்க?

நான் சொல்லப்போற விஷயம் உங்களுக்கு சம்பந்தம் இல்லாத விஷயமா இருந்த மறந்துடுங்க.

மதம் எனும் விஷயத்துக்கு வெளியில வந்துதான் நான் இதை சொல்லுறேன் . பின்வரும் விடயங்களை நான் எவரிடம்  காண்கின்றேனோ?  அவரே கடவுள். 

* அன்பானவர்
* எதையும் எதிர்பாராது அன்பு காட்டுபவர்
* நமக்காக எதையும் செய்யக்கூடியவர்
* எளிமையானவர் ஆனால் மாட்சிமையானவர்
* சமாதானத்தை தன்னில் வெளிப்படுத்துவாரே தவிர வன்முறையை தூண்டும் விதத்தில் இருக்கமாட்டார்.
* நடுநிலையானவர்
* சாந்தமானவர்
* உருவமில்லை ஆனால் உணரலாம்
* கண்ணீரோடு தேடினால் நம்முடன் இடைப்படுவார்
* எங்களிடம் பொன்னோ பொருளோ எதிர்பார்ப்பவர் அல்ல, மாறாக நாங்கள் அவரில் அன்பு கூறவேண்டும் என எதிர்பார்ப்பவர்.

இதெல்லாம் தன்னிடம் கொண்டவரை கடவுளாக ஏற்றுகொள்வது சரிதானே?


எனக்கு தெரிந்த ஒரு உண்மை இரண்டாம் பகுதி விரைவில் வரும்...

Wednesday, March 2, 2011

எனக்கு தெரிந்த ஒரு உண்மை...

ஒவ்வொரு மனிதனின் பின்னாலும் அவனுக்கே தெரியாமல் இரு கைகள் கிரியை செய்கின்றன. என் பாஷையில் சொல்வதென்றால், ஒன்று கடவுளின் கை, மற்றையது சாத்தான் என்றழைக்கப்படும் பொல்லாங்கனின் கை.

சாத்தானின் கை எங்களை தள்ளிவிடும் போதெல்லாம், கடவுளின் கை எங்களை தாங்கிப் பிடித்துக்கொள்கிறது. இந்த இரு செயற்பாடுகளும் தினமும் இடம்பெற்றாலும் கூட நாம் அதை ஒரு போதும் உணர்ந்துக்கொள்வதே இல்லை.

ஆனால் எங்களில் பலர் தாங்கும் கரங்களை விட தள்ளிவிடும் கரங்களையே விரும்புகிறோம்.

ஏன் தெரியுமா???

நான் சொல்றத விட நீங்களே கொஞ்சம் யோசித்துப்பாருங்க...
புரியல்லன்னா சொல்லுங்க எழுதுறேன்...

எப்பிடியும் நான் எழுதுவேன். காத்திருங்க

because ரொம்ப நேரம் வாசிக்க எனக்கும் பிடிக்காது.